சாலையோரச் சங்கதிகள் - 2
ரமேஷ் குமார் டில்லியிலிருந்து
புராணா சால் முபாரக் ஹோ!
இந்த குரலைக் கேட்டவுடன் புரிந்துவிட்டது யார் இதுவென்று.
வேறு யார்? கணேஷ் தோபி. கொல்கொதா (Kolkota)
"ஹெல்லோ"வித்தேன்.
கணேஷின் வாடிக்கையான விளையாட்டு உரையாடல் பரிமாறல்.
இந்த டிரக் டிரைவர் எப்பவுமே இப்படித்தான். எந்த மாசம், எந்த தேதி ஒரு பொருட்டே இல்லை.
எப்பவுமே புராணா சால் முபாரக் ஹோ (பழைய வருஷ வாழ்த்துக்கள்!) என்று சொல்லித்தான் பேச தொடங்குவார்.
சுமார் 50 வயசு இருக்கும். உத்தர பிரதேச ஜோன்பூர் ஊர்க்காரர்.
கிட்டத்தட்ட 25 வருஷ டிரக் டிரைவர் தொழில்.
ஆறு வருஷங்களுக்கு முன்னால் பரிச்சயமானவர்.
அச்சமயம் VRL லாஜிஸ்டிக்ஸ்க்கு வண்டி ஓட்டிக்கொண்டிருந்தார்.
தற்செயலாக எனக்கு போன் செய்து ஒரு சாலை விபத்துப்பற்றி தகவல் சொன்னவர்.
எங்கிருந்து என் போன் நம்பர் இவருக்கு கிடைத்தது?
ஒரே புதிர். இட்'ஸ் ஒகே.
அடிக்கடி போன் அடித்து நிறையவே பேசுவார். நேரம் காலம் போவதே தெரியாது. தமிழ்நாடு லோடு இருந்தால், "நான் உங்க ஜனம் பூமி வந்திருக்கேன்" என்பார்.
சுட்டுப்போட்டா கூட தமிழ் வராது. ஆனால் நிறைய ட்ரிப் அடிப்பார் தமிழ்நாடு பக்கம்.
மூன்று வருஷங்களுக்கு மூனால் இவரை நான் கொல்கொத்தாவில் சந்தித்தேன். இரண்டு நாட்கள் என்னுடேனேயே சுற்றிக்கொண்டு இருந்தார். நிறைய விஷயங்களை பகிர்ந்து கொண்டோம்.
பின்னர் பிரியாவிடை. அருமையான நண்பர்.
சமீபத்தில் ஒரு இளங்காலையில் போன் அடித்தார்.
அதே புராண சால் முபாரக் முன்னுரை.
என்ன விஷயம், கணேஷ்ஜி?
நமஸ்தே, சர்ஜீ. என் பையனை அறிமுகப்படுத்தலாம்னு போன் போட்டேன்.
நான்கு ஆண் பிள்ளைகள். முதல் இரண்டு பிள்ளைகள் பிளஸ் டூ படித்துவிட்டு அரசாங்க உடயோகத்துக்கு தயார் ஆகிறார்கள். மூன்றாம் பையன் ரவி டொபி இப்போது அவர் கூட இருக்கிறன். அவனைத்தான் கணேஷ்ஜி அறிமுகப்படுத்த விரும்புகிறார்.
எங்கே இருக்கீங்க இப்ப?
ஹாலடியா பேக்டரி வெளியிலே வெயிட் பண்ணிட்டு இருக்கேன் லோட் ஏத்திக்க.
என்ன லோட் ?
சமைக்கிற எண்ணெய்
நெடுங்காலம் VRL லாஜிஸ்டிக்ஸ் கம்பெனியிலே வேலை பண்ணிட்டு கடந்த 4-5 வருஷமாக லோகல் கொல்கொத்தா-ஹாலடியா ட்ரிப் அடிக்க ஆரம்பித்து விட்டார்.
இரண்டு நாளைக்கு ஒரு முறை வீட்டுக்கு போக முடியுது. முன்ன மாறி இல்லை. மாசத்துக்கு ஒரு முறை.
சம்பாதிப்பதில் என்ன மாற்றம்?
25 லிட்டர் பைசா என்னோடது. தவிர கொஞ்சம் சம்பளம். மாசத்துக்கு சுமார் Rs.15,000 கிடைக்கும்.
அது சரி. இந்த பையன் என்ன பன்றான்?
டிரக் டிரைவிங் கத்துக்கொடுத்துட்டேன். இப்ப கிரேன் டிரைனிங் அனுப்ப போறேன். நல்ல சம்பளம் கிடைக்கும்.
பையன் ரெடியா?
பில்குல், சர்ஜி. மத்த ரெண்டு பையன்களும் படிச்சிட்டு வேலை தேடிக்கிட்டு இருக்காங்க. டிரைவிங் இன்டெரெஸ்ட் இல்லை. எப்ப வேலை கிடைக்கும் தெரியலை. எல்லாம் கடவுள் விட்ட வழி.
என்ன ரவி, ரெடியா இந்த தொழில் பண்ண?
அவன் தயார்.
நான் போனில்லே பேசிக்கிட்டு இருக்கிறதால ரவியோட ஆக்சன் எனக்கு தெரியலை. பின்னர் கணேஷ்ஜி சொல்ல புரிந்தது.
இந்த கிரேன் வேலை கத்துக்கிட்ட இங்கேயும் நல்ல சம்பளம். வெளிநாட்டுலயும் நல்ல சம்பளம். கொஞ்சநாளைக்கு இங்கே வேலை பண்ணி கை சுத்தமானதும் பாஸ்போர்ட் எடுத்து அனுப்பிடுவேன்.
யார் சொன்னது டிரைவர் மகன் டிரைவர் ஆகமாட்டானு!
Comments
Post a Comment